சென்னையில் வைக்கப்பட்ட அண்ணாவின் முதல் சிலை! - பிடிவாதம் பிடித்த எம்.ஜி.ஆர்
அண்ணா என எழுதத் துவங்கினால், அவர் பெயருக்கு முன்னால் அறிஞர் என கைகள் தானாக எழுதச் செல்லும். அண்ணா என நினைத்தால், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், வாஞ்சையோடு அவர் தம்பிகளுக்கு எழுதிய கடிதம், தமிழக அரசியலின் அச்சாணியாய் அவர் செய்கைகள் நினைவுக்கு வரும். அவருடைய உருவத்தை நினைத்தால் நம் கண்களுக்கு முதலில் இரண்டு உருவங்கள் நினைவுக்கு வரும். அவர் பெயர் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தின் முன் அமைதியாய் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கும் உருவமும், இந்த நிலத்தின் தலைநகரத்தின் முக்கியச் சாலையில் நடுநாயகமாய் கைகளைத் தூக்கிநிற்கும் அந்தச் சிலையும் நினைவுக்கு வரும். அறிஞர் அண்ணாவின் சிலை என்றவுடன் பலருக்கும் மனதில் வருவது அவர் மடியில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருப்பதாய் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிலை தான். இந்த சிலை நினைவில் வரும்போது அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகமும் சேர்ந்தே நினைவில் வந்து விடும் என்பது வேறு கதை. ஆனால் அண்ணா சாலையில் அவர் கம்பீரமாய் கையை தூக்கி நிற்கும் சிலை தான் பேரறிஞருக்கு முதன் முதலில் வடிவமைக்கப்பட்ட சிலை என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த சிலை 2017-ல் பொன்விழாவும் கண்டு முடித்தது. அவரின் இந்த முதல் சிலை உருவான கதை மிகவும் சுவாரஸ்யமானது.
அண்ணாவின் அரசியல் வாழ்வு 1937இல் தொடங்கி 1969இல் அவரது மறைவுக்குப் பிறகும் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்தில் பல ஆண்டுகள் வலுப்பெற்றிருந்த தேசிய கட்சியான காங்கிரஸின் மொத்த வீழ்ச்சிக்கு வித்திட்டு, 1967-ம் ஆண்டு மாநிலக் கட்சியான தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதே உற்சாகத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக செயலாற்ற தொடங்கினார் அண்ணா. பல நாட்களாக அண்ணாவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்த எம்.ஜி.ஆர், அதற்கு இது தான் சரியான தருணம் என்று திட்டம் தீட்ட தொடங்கினார். அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர் இந்த ஆசையை அண்ணாவிடமே சென்று கூறினார். ஆனால் அதை வலுக்காட்டாயமாக மறுத்துவிட்டார் அண்ணா. ஆனால் அண்ணாவிற்கு சிலை வைப்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்த எம்.ஜி.ஆர் மவுன்ட் சாலையில் தான் சிலை வைப்பது என்று இடத்தையும் தீர்மானம் செய்து வைத்திருந்தார்.
ஒரு முடிவு எடுத்தால் அதில் மாறுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணா தனக்கு சிலை வைப்பதை அனாவசியமான செயலாக கருதினார்.
ஆனால் பிடிவாதம் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணாவிற்கு பல அன்புத் தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தார். கடைசியில் ஒருவழியாக அண்ணாவும் சிலை வைப்பதற்கு ஒப்புதல் தந்தார்.
அண்ணாவின் சில புகைப்படங்களை வைத்து சிலை வடிக்கத் தொடங்கினர் சிற்பிகள். அண்ணாவின் சிலை தத்ரூபமாக வரவேண்டும் என்று சிற்பிகளுக்கு கட்டளையிட்டு கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர். அதற்க்கு ஒரு சிற்பி நீங்கள் எதிர்பார்ப்பது போல சிலை வர வேண்டுமென்றால் அண்ணாவே மாடலாக வந்து அமர்ந்தால் தான் சாத்தியம் என்று கூற, அதையும் நடத்திக்காட்டுவதாக முடிவெடுத்தார் எம்.ஜி.ஆர். மீண்டும் அண்ணாவிடம் சென்று அன்புத்தொல்லை கொடுக்க ஆரம்பித்து, அவரை கட்டாயப்படுத்தி சிலைக்கு மாடலாக அமர வைத்தார்.
அண்ணாவின் சிலைக்கு அவரையே மாடலாக அமர வைத்து சிற்பிகள் சிலை வடிக்க அதை எம்.ஜி.ஆர் மேற்பார்வை பார்ப்பதை நீங்கள் இந்த புகைப்படத்தில் காணலாம்.
எம்.ஜி.ஆரின் பிடிவாத குணத்தால் மட்டுமே இந்த சிலை சாத்தியமானது என்று கூறுவது என்றும் மிகையாகாது. 1–1–1968 அன்று உலகத்தமிழ் மாநாட்டையொட்டி, எம்.ஜி.ஆர். வழங்கிய இந்த அண்ணா சிலையை, சர்.ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார். இந்த சிலைதான் இன்று அண்ணா சாலையை அலங்கரித்து நிற்கிறது.
இதேபோல் எம்.ஜி.ஆர் காலத்தில் அ.தி.மு.க-வில் இருந்த கே.எம்.எம், மேத்தா பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா புத்தகம் படிப்பது போன்ற சிலையை வடிவமைத்து நிறுவினார். சிலை திறப்பதற்கு எம்.ஜி.ஆரை அழைத்தார் மேத்தா. ஆனால் எம்.ஜி.ஆர் வர மறுத்துவிட்டார். அதிருப்தியடைந்த மேத்தா, அப்போது அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து தி.மு.கவில் இணைந்தார். எம்.ஜி.ஆர் வர மறுத்த அண்ணாவின் சிலை திறப்பு விழாவை கருணாநிதியை வைத்து நடத்தி முடித்தார் மேத்தா. பெரியகுளத்தில் அண்ணா சிலை உதயமானது.
அண்ணாவிற்கு சிலை வைப்பதில் பிடிவாதமாய் இருந்த எம்.ஜி.ஆர், மேத்தா அமைத்த அண்ணாவின் சிலையை திறந்து வைக்க மறுத்தது புதிராகவே கருதப்படுகிறது.
பல சிலைகள்... பல கதைகள்... மீண்டும் சிந்திப்போம்!
Arignar Anna Bust Sculpture -
Bronze, Gold & Black - 8"
Write to us
Describe your Custom Sculpture Requirement